மதமாற்றமும் மனமாற்றமும்

-அராலியூர் அமரர் வெ சு நடராசா-

- V. S. Nadarasa -
 

முகவுரை

சிற்சில காலங்களில் மக்கள் மதம் மாறும் செய்திகளைக் கேட்டு வருகிறோம்; படித்து வருகிறோம். ஒருவர் தாம் கைகொண்டு வந்த சமயாச்சாரக் கொள்கைகளை விட்டுப் பிற சமயக் கொள்கைகளை தழுவிக் கொள்வதையே சாதாரணமாக மதமாற்றம் என்று கூறுகின்றோம்.

மதம் மாற வேண்டிய காரணங்கள் என்ன? முற்காலத்திலும் மதங்கள் மாறியிருக்கிறார்களா? நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது? வருங்காலத்திலும் மதம் மாறப் போகிறார்களா? இதற்கு ஒரு முடிவு காண முடியாதா? மதம் மாறுபவர்களைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளலாமா? என்ற பலவற்றை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும்.

பல்லவர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும், மதம் மாற்றம் நடந்து தான் இருக்கின்றது. நாயன்மார் காலத்திலும் நடந்து தான் இருக்கின்றது. ஆரியர் ஆட்சியிலும் அன்னியர் அதிகாரத்திலும் மத மாற்றம் நடந்து தான் இருக்கின்றது. எவ்வெக்காலங்களில் மத மாற்றம் மட்டுக்கு மிஞ்சி விடுகின்றதோ அவ்வக்காலங்களில் உத்தமர்கள், மகான்கள் தோன்றி வேண்டிய வழிவகைகள் காண்கின்றனர்.

பல்லவர் காலத்தில்

பல்லவ மன்னர் காலத்தில் தான் மருள் நீக்கியார் என்ற நாவுக்கரசர் இருள் நீக்கினார். இதே நாவுக்கரசர் தமது இளம் வயதில் சைவசமயத்திலிருந்து சமண சமயத்தைத் தழுவினார். சமணர் அவரைபோற்றி வணங்கினர். தருமசேனர் என்னும் பட்டப் பெயரையும் சூட்டிக் கௌரவித்தனர். இறுதியில் நடந்தது என்ன? தம்பியின் விமோசனத்துக்காக தமக்கை விரதம் பூண்டாள். தமக்கை திலகவதியார் இறைவனை வேண்டினாள்.வேண்டுவோர் வேண்டுவன ஈயும் இறைவன் செவிமடுத்தான். தம்பிக்குச் சூலைநோயை உண்டுபண்ணித் திரும்பவும் சைவசமயத்தைத் தழுவச்செய்தாரல்லவா? இந் நிகழ்ச்சி அக்காலச் சமண அரசனையும் குடிமக்களையும் கூடச் சைவசமயத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தது. இந்த இடத்தில் ஓர் அக்கா, ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய காரியத்தச் சாதித்தது சிறந்ததல்லவா?

பாண்டியர் காலத்தில்

பாண்டிய அரசன் மதுரையம்பதி மன்னன் மதம் மாறிச் சமணமதம் புகுந்தனன். அரசன் எவ்வழி குடிமக்களும் அவ்வழி. நாடு முழுவதும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க ஒரு புத்திரனைத் தர வேண்டுமென்று தவம் செய்தார் ஒரு பெரியார். இவரே ஞானசம்பந்தரின் தந்தை சிவபாத விருதயர். இக்காலத்தில் சமயத்துக்குப் பாடுபட ஒரு புத்திரன் வேண்டுமென விரதம் பூணுபவர் யார்?

மன்னன் மதம் மாறிய போதிலும் மனைவி மங்கையற்கரசியார் மதம் மாறாது இருந்தனள். சுரத்தினால் வருந்தினன் பாண்டிய மன்னன். சுரம் தீர்க்க வரும் படி அழைத்தனள் மங்கயர்க்கரசி ஞானக் குழந்தையை. மகாராணியின் வேண்டுகோளுக்கிணங்கி தேவாரம் பாடிய செல்லக் குழந்த அரசனை மீட்டதுமல்லாது, அந்நாட்டு மக்களனைவரையும் மதம் மாறச் செய்து திரும்பவும் சைவத்தை நிலை நாட்டிய தென்றால் பெருமை கொள்ளத்தக்க விஷய மல்லவா?

மேற்காட்டிய இரு உதாரணங்களிலும் இருபெண்மணிகள் மதம் மாறும் விஷயத்தில் எடுத்துக்கொண்ட சிரத்தையைச் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டுமல்லவா?

மூலம்: இந்து இளைஞன் - December 1961

Read this article in PDF.

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top